“ஹீரோ”
(ஹீரோவிற்கு கதை எழுதுவது
எப்படி?)
அவற்றில் பெரும்பான்மையான ஒன்லைன்கள் அவர்கள்
பார்த்தப் படங்கள் என்பதால்,
முழுக்கதையைச் சுருக்கி கதைச்சுருக்கத்தை அனுப்பி இருந்தனர்.
ஆனால், ஒன்லைன்கள் என்பது
கதைச்சுருக்கம் அல்ல.
கதைக்கருவே ஒன்லைன் ஆகும்.
எடுத்துக்காட்டாக, மணிரத்தினத்தின் “மௌனராகம்” திரைப்படத்தின் கதைக்கருவை (ஒன்லைன்) இப்படி எடுத்துக்கொள்ளலாம்,
“திருமணமே வேண்டாம் என நினைக்கும்
ஒரு பெண்ணிற்கு இரண்டொரு நாளில் திருமணம் நடந்தால் என்ன ஆகும் என்பதே அதன் கதைக்கரு
ஆகும். அதாவது ஒன்லைன்.
இப்படி ஒரு கதைக் கரு கிடைத்து விட்டால்,
கதை பண்ணுவது எளிது.
எப்படி?
“கதைக் கருவில் உள்ள கேள்விகளை அடுக்கிச்
சென்றால் கதையை வடிமைப்பது என்பது மிக மிக எளிது”.
1. திருமணமே வேண்டாம் என நினைக்கும் ஒரு பெண்?
2. ரேவதி வீட்டில் ஏன் திருமணம் செய்ய வற்புறுத்துகிறார்கள்?
· ரேவதியின் அப்பா இன்னும் சில மாதங்களில் பணி ஓய்வு பெறப்போகிறார்.
· ரேவதிக்கு அடுத்து கல்யாணம் ஆகப்போகும் வயதில் இரண்டு தங்கைகள் உண்டு.
· வீட்டிற்கு மூத்த அண்ணனும் அவர்கள் சமூக வழக்கப்படி திருமணம் ஆனவர்.
· பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை மோகன் சைக்காலஜியில் M.A.,படித்தவர்.
· டெல்லியில் நல்ல போஸ்டிங்கில் உள்ளவர்.
· மோகனுக்கும் உடன் பிறந்தவர்கள் என எந்தவித அக்குத் தொக்கும் இல்லாதவர்.
· அதனால் இரண்டொரு நாளில் திருமணம் செய்து வைத்தால் மகள் டெல்லிப் பக்கம் போய்விடுவாள்.
· ரிட்டயர்டு ஆகிவரும் பணத்தில் மீதி இருக்கும் இரண்டு பெண்பிள்ளைகளுக்குத் திருமணம்
செய்து விடலாம் என யோசித்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள்.
· ரேவதி “ திருமணமே வேண்டாம்”
என்கிறாள்.
· அப்பாவுக்கு நெஞ்சு வலி வருகிறது.
· அம்மா, மகளிடம் வந்து
தாலிப்பிச்சை கேட்கிறாள்.
· திருமணத்திற்கு ஒத்துக் கொள்கிறாள்.
· திருமணம் நடக்கிறது.
3. திருமணத்திற்குப் பிறகு என்ன நடக்கும்?
· முதலிரவு நடக்கும்.
· அப்புறம், கணவணோ மனைவியோ பரிசுப்பொருள் வாங்கி தருவார்கள்.
· அப்புறம் வெளியில் அழைத்துச் செல்வார்கள்.
· ஓகே. இதெல்லாம் இருவருக்கும்
திருமணம் பிடித்து நடந்தால்..
· ஆனால், “திருமணமே வேண்டாம்
என நினைக்கும் பெண்” என்பது தான் ஒன்லைன் அல்லது கதைக்கரு.
· அப்போ எப்படி காட்சிகள் வைக்கலாம்.
· சிம்பிள், முதலிரவு நடக்கவில்லை.
· அடுத்த நாள் மோகன் அலுவலகம் செல்கிறார்.
· அதிகாரி (மெண்ட்டார்)
வி.கே.ராமசாமி என்னாச்சி
என்கிறார்.
· “வெளியில் அழைத்துச் செல். புது ஊரு பயம் இருக்கும். பரிசுப்பொருள் வாங்கி தா” என ஆற்றுப்படுத்துகிறார்.
· ரேவதியை வெளியில் அழைத்துச் செல்கிறார் மோகன்
· பரிசுப் பொருள் வாங்கித் தர ஆசைப்படுவதாக கூறுகிறார்.
· “விவாகரத்து வேண்டும் என்கிறாள்.
· “நிலாவே வாவும், மன்றம் வந்த தென்றலும்” வந்து சேருகிறது.
· “ஏன் என்னை பிடிக்கவில்லை“ “ஓன் மனசுல நான் இல்லையா”
என கேட்கிறார்.
· ஏன்னா? என் மனசு என்னிடம்
இல்லை என்கிறாள் ரேவதி.
· ப்ளாஷ்பேக் ரேவதி – கார்த்திக்
காதல் காட்சிகள்.
· கார்த்திக் இறப்பு வரை… ப்ளாஷ்பேக் முடிந்தவுடன்…
·“ நீயா கேட்ட விவகாகரத்தும், நான் வாங்கி தர நினைச்ச கொலுசும்
இந்தா இங்க இருக்கு. எனக்கு ஒன்னோட பழசு பத்தி கவலை இல்ல..
எது வேனுமோ நீயே முடிவு பண்ணு” என்று..
· இளையராஜா தபேலா புல்லாங்குழல் நாதஸ்வரம் என திருமண பந்த வாத்தியங்கள் அனைத்தையும்
வாசித்துத் தள்ளுகிறார்.
· ரேவதி எதை எடுப்பாள் என மோகன் போலவே ஆடியன்சும் ஆர்வமுடனும் படபடப்புடனும் இருக்கிறார்கள்.
· கொலுசை எடுத்தால் படம் அங்கேயே முடிந்து விடும்.
· அதனால், விவாகரத்துப்
பத்திரத்தைக் கையில் எடுக்கிறாள்.
· இடைவேளை
· எவ்வளவு அழகா, நேர்த்தியா, சிம்பிளா திரைக்கதை அமைத்து உள்ளார் பாருங்கள்.
· இவ்வளவு அழகாக, நேர்த்தியாக, சிம்பிளாக திரைக்கதை அமைய காரணம் நாம் குறிப்பிடும்
ஒன்லைனே ஆகும்.
· “திருமணமே வேண்டாம் என நினைக்கும் ஒருவன்(மோகன்)..
பெண்பார்க்க வரும் இடத்தில் “பிடிக்கவில்லை”
என்று சொல்லி விட்டு போலாம்” என நினைத்து வரும்
இடத்தில் பெண் பிடித்துக் கல்யாணம் பண்ணினால் என்ன ஆகும்? என்று
நீங்கள் கதைக் கருவை வேறு கோணத்தில் யோசித்தால்…. வேலைக்கு ஆகாது.
எனவே, நீங்கள் வைத்துள்ள கதையின் ஒன்லைனை ஒன்றுக்கு 100 தடவை எழுதி எழுதி பாருங்கள்.
அந்த ஒன்லைனுக்கு கீழே நிறைய கேள்விகளை எழுப்புங்கள்.
அடித்து அடித்து எழுதுங்கள்
அடித்து அடித்து எழுத எழுத தான் ஒன்லைன் மெருகேறும்.
ஒன்லைன் மெருகேறுவதற்கு என்ன இருக்க வேண்டும்?
ஒன்லைன் மெருகேறுவதற்கு உங்கள் கதையில் ஒரு நோக்கம்
இருக்க வேண்டும்.
நோக்கம் என்பது
இயக்குநர் பாரதிராஜாவிற்கு “கிராமத்தில் தன்னோடு வாழ்ந்த மக்களின் கதையை ஊரறிய சொல்ல வேண்டும்
என்ற நோக்கம் இருந்தது.
இயக்குநர் பாலச்சந்தருக்கு “குடும்ப உறவுகளில் உள்ள சிக்கல்களையும்,
அதற்கான தீர்வுகளையும் சொல்ல வேண்டும்” என்ற நோக்கம்
இருந்தது. அதனால் தான் அவரால் 100 படங்களை
இயக்க முடிந்தது.
இயக்குநர் பாலுமகேந்திராவிற்கு “பதின்ம வயது, மற்றும் ஆண் –பெண்களுக்கு உள்ள பாலியல் சிக்கல்களால்
உறவுமுறைகளில் ஏற்படும் சிக்கல்கள் அதற்கான தீர்வுகள் ஆகியவற்றை கூற வேண்டும் என்ற
நோக்கம் இருந்தது.
இயக்குநர் ப.ரஞ்சித்திற்கு “தன்னுடைய மக்கள் பற்றிய பொதுவான
பிம்பத்தை உடைத்து, அவர்கள் நீங்கள் நினைப்பது போல் அல்ல.
அவர்களுக்கும் காதல்,
அழுகை, புன்னகை, குடும்பங்கள்
கொண்டாட்டங்கள் உண்டு என கூற வேண்டிய நோக்கம் இருந்தது.
இயக்குநர் மாரி செல்வராஜிக்கு “தன்னுடைய மக்கள் கல்விக்கும்,
10 ரூபாய் கூலி உயர்விற்கும் என்ன பாடுபட வேண்டியுள்ளது” என அவர்களின் வலியைக் கூற வேண்டும் என்ற நோக்கம் உள்ளது.
இயக்குநர் மணிரத்தினத்திற்கு நவயுக ஆண் மற்றும் பெண்களின் மன உணர்வுகளை புதுநோக்கில்
கூற வேண்டும் என்ற நோக்கம் இருந்தது.
பத்திரிகையாளர் பரத்வாஜ் ரங்கன் மணிரத்தினத்தின் திரைப்படங்கள் குறித்து அவரிடமே
பேட்டிக் கண்ட பேட்டிகளின் தொகுப்புகளை “மணிரத்தினம் படைப்புகள்
– ஓர் உரையாடல்” என்னும் பெயரில் நூலாக வெளியிட்டுள்ளார்.
இந்நூலில் “மௌனராகம்“ திரைப்படம் குறித்துக் கூறுகையில்
“ நான் மௌனராகம் படத்திற்கானக் கதையை முதலில் ஒரு சிறுகதையாக
தான் எழுதினேன்.
அச்சிறுகதையின் கதைக்கரு “பெண்களை, சிறுவயது முதலே ஆண்களோடு பேசாதே, ஆண்களைப் பார்க்காதே, ஆண்களோடு பழகாதே என்று சொல்லி வளர்க்கிறோம்.
ஆனால், நம்முடைய சில
நெருக்கடிகளால் அல்லது நல்ல மாப்பிள்ளை, அரசாங்க வேலையில் உள்ளவர்
என்பதால் திடீர் என்று அவர்களை யாருக்காவது திருமணம் செய்து வைப்பது எவ்வளவு பெரிய
பெண் மனஉணர்வுகளுக்கான வன்முறை?” இதை மையப்படுத்தியே அச்சிறுகதையை
எழுதினேன்.
அதன் விரிவான திரைக்கதை வடிவமே மௌனராகம்.
இப்போது நான் மௌனராகத்தை இயக்கினேன் என்றால் கார்த்திக் பாத்திரத்தை இணைக்காமல்
எடுப்பேன்” என்கிறார் இயக்குநர்
மணிரத்தினம்
இப்படி எல்லோருக்கும் தான் எடுக்க வேண்டிய திரைப்படத்திற்கான ஒரு நோக்கம் உள்ளது.
அந்நோக்கமே, அவர்களை மைல்கல் இயக்குநராக மாற்றியுள்ளது எனலாம்.
நோக்கம் இல்லாத எந்தப் படைப்பாளனும் இறுதிவரை படைப்பாளராக ஆவதில்லை.
எனவே, நீங்கள் முதலில்
உங்களைப் பற்றிய சில கேள்விகளை தனக்குத் தானே கேட்டுக் கொள்வது நல்லது.
· நான் திரைத்துறைக்கு வரும் நோக்கம் என்ன?
· எந்தக் கதையைக் கூற நான் இங்கு வந்துள்ளேன்?
· இந்தக் கதையை நான் ஏன் சொல்ல வேண்டும்?
· இந்தக் கதையைச் சொல்வதால் அல்லது பார்ப்பதால் யாருக்கு என்ன பயன்?
· இந்தக் கதையைச் சொல்லத்தான் படித்த இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் படிப்பை விட்டு இயக்குநராக
வந்திருக்கேனா?
· இந்தக் கதைச் சொல்லத்தான் கண்டபய கேள்விக்கும் பதில் சொல்ல கூனிகுறுகி நிற்கிறேனா?
· இந்தக் கதைச் சொல்லத்தான் “டைரக்டர் ஆகுறேனு.. என்னைய ஏமாத்துறது மட்டும் இல்லாம..
என் பொண்டாட்டி புள்ளையையும் ஏமாத்திட்டு நிக்கிறேனா?
என்பது போன்ற சிலபல வினாக்களை உங்களை நீங்களே கேட்டுக்
கொள்வது நல்லது.
கேட்டுக் கொண்ட பிறகு…
ஒரு பேப்பர் பேனாவை எடுத்து… உங்களிடம் இருக்கும் கதைகளை வரிசைப்படுத்தி
ஒன்லைன் போட்டுக் கொள்ளுங்கள்.
ஞாபகம் இருக்கட்டும்..
ஒன்லைன் போட்டுக் கொள்ளுங்கள்…
மீண்டும் நினைவுபடுத்துகிறேன் ஒன்லைன் என்பது கதைச்சுருக்கம்
அல்ல. கதைக் கரு.
கதைக்கரு என்பது ஒரு கதையின் வழி நீங்கள் சொல்லப்
போகும் உங்கள் நோக்கத்திற்கான விதை.
விதை கிடைத்து விட்டால்…
நம்நாட்டு நாட்டுப்புறக்கதைகள்
பிறநாட்டு நாட்டுப்புறக்கதைகள்
நம்நாட்டுச் சிறுகதைகள்,
பிற நாட்டுச் சிறுகதைகள்
நம்நாட்டுப் புதினங்கள்
பிறநாட்டு நாவல்கள்
நம்நாட்டு திரைப்படங்கள்
பிறநாட்டு திரைப்படங்கள்
இப்படி பலவிதமான விதையை வளர்ப்பதற்கு உரங்களும்
தண்ணீர்களும் நிரம்பி வழிகின்றன.
இவற்றை இட்டு நிரப்பினால்..
வாழையடி வாழையாக வாழ்வதற்கான நூறு அல்ல..
ஆயிரம் திரைக்கதைகளை உங்களால்
எழுதி விட முடியும்.
என்ன பிரச்சனை என்றால் எழுதுவது தான் பிரச்சனை.
அதற்கும் ஒரு வழி சொல்கிறேன்.
அந்த வழி என் வழி அல்ல.
நான் பின்பற்றும் ர.கி.ரங்கராஜன்
எப்படி எழுதப் பழக வேண்டும்? எனச் சொல்லும் வழி.. இதோ.
பயப்படாமல் எழுதுங்கள் - ரா.கி. ரங்கராஜன்
(“ எப்படி கதை எழுவது” நூலில் இருந்து)
—-------------------------------------
ஆரம்ப எழுத்தாளர்கள் எல்லோருக்குமே
ஒரு காய்ச்சல் உண்டு.
ஒரு பயம்,
ஒரு நடுக்கம்,
ஒரு குழப்பம்.
'இரண்டு வாக்கியம் எழுதுகிறேன்.
அப்புறம் பேனா அப்படியே நின்றுவிடுகிறது.
எதுவுமே ஓடவில்லை இதற்கு என்ன செய்வது?
என்று தலையைச் சொறிந்து கொண்டு தவிக்கிறார்கள்.
முதல் வேலையாக, இந்தப் பயத்தை ஒழித்தாக வேண்டும்.
காகிதத்தின் மீது பேனாவை வைத்தோமா,
கடகடவென்று எழுதிக் கொண்டு போனோமா என்று இருக்க வேண்டும்.
ஒரு சோதனையின் மூலம் உங்களை நீங்களே பரிசோதித்துப் பாருங்கள். இந்தப் பரிசோதனையின்போது என்ன எழுதப்போகிறோம் என்பது உங்களுக்கே தெரியாது.
நிர்ப்பந்தம் எதுவும் இல்லாமலே,
மளமளவென்று எழுதப் போகிறீர்கள்.
இந்தப் பரிசோதனைக்குப் பத்து நிமிடம் பிடிக்கும்.
தோட்டம், ஆற்றங்கரை போன்ற திறந்தவெளியாக
ஓர் இடம் தேர்ந்தெடுத்துக் கொண்டு வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள்.
காகிதத்தையும் பேனாவையும் எடுங்கள்.
காகிதத்தின் தலைப்பில் 'நான் இப்போது இங்கே உட்கார்ந்து
எழுதப் போகிறேன்'
என்று கொட்டை எழுத்தில் குறித்துவிட்டு,
பேனாவை மூடி வையுங்கள்.
கண்களை மூடிக் கொள்ளுங்கள்.
முகத்தின் தசைகளைத் தளரவிடுங்கள். (ரிலாக்ஸ்).
பிறகு உடம்பின் ஒவ்வோர் உறுப்பாக மனசுக்குள் சொல்லிச் சொல்லித் தளர
வையுங்கள்.
அதாவது
இப்பொழுது என் கழுத்து… ரிலாக்ஸ்,
இப்பொழுது என் தோள்… ரிலாக்ஸ்,
இப்பொழுது என் கைகள் ரிலாக்ஸ்' என்று சொல்லிக் சொல்லி
ஒவ்வோர் உறுப்பிலும் உள்ள இறுக்கத்தை அகற்றி உடம்பைத் தளர்ந்தாற்போல் ரிலாக்ஸ்ட்
ஆக இருக்கச் செய்யுங்கள்
உடம்பிலுள்ள இறுக்கம்,
'டென்ஷன்' அத்தனையும் பாதம் வழியே
இறங்கி வெளியேறுகிற மாதிரி நினைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது எல்லாத் திசைகளிலும் செவியைச் செலுத்தி,
என்னென்ன ஓசைகள் கேட்கின்றன என்பதைக் கவனியுங்கள்.
எவ்வளவு சத்தம் ஒலிக்கிறதோ
அவ்வளவையும் கேளுங்கள்.
கொஞ்சம் கொஞ்சமாகக் கண்ணைத் திறவுங்கள்.
பேனாவை எடுங்கள்.
அடுத்த வாக்கியம் என்ன வரும் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல்
இப்போதைக்கு ஏற்படும் சத்தங்களை,
வாசனைகளை,
ருசிகளை,
ஸ்பரிசங்களை, காட்சிகளை எழுதிக் கொண்டே போங்கள்
வாக்கியங்கள் எப்படி வேண்டுமானாலும் வரட்டும்,
இரண்டு பக்கம் எழுதிய பிறகுதான் நிறுத்த வேண்டும்.
இப்பொழுது பாருங்கள்.
இரண்டு பக்கம் பூரா வார்த்தைகளால் நிரப்ப
உங்களால் முடிந்திருக்கிறது.
நிஜமாய் அனுபவித்த விஷயங்களை எழுதியிருக்கிறோம் என்ற தன்னம்பிக்கையும் சந்தோஷமும் ஏற்பட்டிருக்கின்றன.
எந்த ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்குள்ளும் சிறைப்பட்டு நில்லாமல்,
எந்தத் திசையிலும் எதையும் எழுதலாம் என்று இருக்கிறபோது, வாக்கியங்கள்
தடை இல்லாமல் வந்திருக்கின்றன.
இந்தப் பரிசோதனையின்படி நான் செய்து பார்த்து,
காகிதத்தில் எழுதியதைக் கீழே தருகிறேன்.
மளமளவென்று எழுதிய விஷயம்
டிரான்ஸிஸ்டரில் 'அள்ளி அள்ளி' என்ற பாட்டு,
தெருவில் ஒரு பையன் 'ட்டேய்' என்று கத்துகிறான்.
மூன்று சக்கர சைக்கிள் 'கிணி கிணி என்று மெதுவே ஒலிக்கிறது.
ஒரு காக்கை 'க்ரா க்ரா' என்று கூவ…. இன்னும் இரண்டு மூன்று காக்கைகள் சேர்ந்துகொள்கின்றன.
ஸ்டீல் மேஜையின் மேற்பரப்புத் துருப்பிடித்திருப்பதால் கையில் சொர சொரா.
நேரம் இப்பொழுது ..நாலுமணி நாற்பத்தைந்து நிமிடம் என்கிறது ரேடியோ.
மஞ்சள்சுடிதார் அணிந்த ஒரு பெண், நீலச் சட்டை, பாவாடை போட்ட ஒரு வேலைக்காரச் சிறுமியுடன் கை வீசிக்கொண்டு நடக்கிறாள். சிறுமி நல்ல குண்டு.
பர்ர் என்று மோட்டார் பைக் உதைத்துக் கொண்டு இளைஞன் புறப்படுகிறான்.
எனக்கு மூக்கை அடைத்திருக்கிற மாதிரி இருக்கிறது. இடது பாதத்தின் ஓரத்தில் அரிக்கிறது.
பாதத்தின் மீது பாதத்தை வைத்திருக்கிறேன். அழுத்தினால் வலிக்கிறது.
எதிர் வீட்டு வெங்கடேசன் ஒரு சிறுமியைச் சைக்கிளில் உட்கார வைத்துப் பின்பக்கம் கை கொடுத்துப் பழக்குகிறார்.
'நான் இருக்கப் பயம் எதற்கு என்று ரேடியோ பாடுகிறது. கட்டம் போட்ட சட்டை அணிந்த பையன் இரண்டு கைகளையும் ஆட்டிக் கொண்டு ஓடுகிறான்.
சங்கரன் பனியன் அணிந்து கையில் சைக்கிள் பம்ப் வைத்துக் கொண்டு வெளியே போகிறார்.
சாப்பிட்ட பூரியின் துணுக்கு பல் இடுக்கிலிருந்து நாக்குக்கு வருகிறது.
வெளிர் பச்சை நிற ஸ்கூட்டர், யாரையோ பிடிக்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்ட மாதிரி மூக்கைத் திருப்பி நிற்கிறது.
போகன்வில்லா செடியை 'ட்ரிம்' பண்ணிக் கொண்டிருக்கிறார் மலையாளத்து அம்மாள். எதிர் வீட்டுச் சுவரில் மாடிப்பக்கத்தில் மட்டுமே வெயில் விழுந்திருக்கிறது.
கீழே எல்லாம் நிழல் மாடியில் செடிக்காகத் தொங்க விடப்பட்ட சின்ன மண் தொட்டி பூவோ செடியோ இல்லாமல் காய்ந்து கிடக்கிறது.
ஒல்லியான பையன் லுங்கியின் இரண்டு பக்கத்தையும் இரண்டு கைகளில் தூக்கிப் பிடித்துக் கொண்டு நடக்கிறான்.
காற்று திடீர் என்று வேகமாய் வீசி, சட்டைக்குள்ளாக மார்புக்குள் புகுந்து ஒரு சிலிர்ப்பு உண்டாகிறது. காற்று நின்றதுமே புழுக்கமாய் இருக்கிறது.
இது முக்கியமான அம்சம் ஏதாவது எழுத வேண்டும், எழுதிக் கொண்டே போக வேண்டும்.
தயங்காமல் எழுதுகிற பழக்கம் வரவேண்டும் என்பதற்காக இவ்வளவு தூரம் சொன்னேன்.
என்றாலும் “கதை எழுதுவதின் முக்கியமான அம்சம் ஒன்று இங்கே இருக்கிறது.
அதாவது ..........
காட்சி.
நான் எழுதியதை ஏன் நிறுத்தாமல் படித்தீர்கள்?
அதில் காட்சிகள் இருப்பதுதான் காரணம்.
கண்ணாலும், காதாலும், நாக்காலும், ஸ்பரிசத்தாலும்
நான் அனுபவித்தது எதுவோ அதன் பெயரே காட்சி,
நான் காட்சிகளாகச் சொல்லிக் கொண்டே போனேன்.
ஆகையினால்தான் அதைக் கிடுகிடுவென்று படிக்க உங்களால் முடிந்தது.
எதையும் பொதுப்படையாகச் சொல்லாமல் காட்சியாகச் சொல்லும்போது அதில் ஒரு சுவாரஸ்யம் உண்டாகிறது.
உதாரணமாக, இரண்டு நண்பர்கள் ஊட்டிக்குப் போய் விட்டு திரும்பியிருக்கிறார்கள்.
ஒருவர் "அங்கே குளிர் தாங்க முடியவில்லை என்று பொதுப்படையாகச் சொல்கிறார்.
இரண்டாவது நபரோ -
''சாயந்தரம் நான்கு மணிக்குமேல் வெளியே தலைகாட்ட முடியவில்லை.
தெருவில் ஒரே பனி மழை. ரூமுக்குள் எத்தனை போர்வைதான் போர்த்திக் கொள்வது?
பேச வாயைத் திறந்தால் பல் கிடுகிடுவென்று நடுங்குகிறது.
ராத்திரிதான் கணப்புப் போடுவோம் என்கிறான் ஓட்டல் பையன்.
பாத்ரூமில் காலை வைக்க முடியவில்லை. குழாயைத் திறந்தால் கையையே வெட்டிவிடுகிற மாதிரி ஐஸ் கட்டியாய்த் தண்ணீர் வருகிறது.
பிளாஸ்க்கைக் கொடுத்துப் பையனைக் காப்பி வாங்கிவரச் சொன்னேன்.
அப்பாடா! சுடச்சுடத் தொண்டையில் காப்பி இறங்கிய பிறகுதான் உயிர் வந்தது என்று சொல்கிறார்.
நீங்கள் இந்த இரண்டாவது நபரின் பேச்சைத்தான் 'ஆ' என்று கேட்டுக் கொண்டு நிற்பீர்கள்.
ஏன்? ஏனென்றால்
இந்த நண்பர்தான் தன் அனுபவத்தைக் காட்சியாகச் சொல்கிறார்.
உங்கள் வீட்டு வேலைக்காரி, முந்தின தினம் பார்த்துவிட்டு வந்த ஒரு சினிமாவைப் பற்றி
அடுத்த வீட்டு வேலைக்காரியிடம் பேசுவதைக் கேட்டிருக்கிறீர்களா?
அடுத்த முறை கேட்டுப் பாருங்கள்.
படத்தின் தத்துவத்தைச் சொல்ல மாட்டாள்.
யார் யார் என்ன என்ன செய்தார்கள்.
என்ன என்ன பேசினார்கள் என்பதைத்தான் சொல்வாள்.
அதாவது, அந்தப் படத்தின் காட்சிகளை.
ஏனென்றால். காட்சிகள்தான் அவளைக் கவர்ந்திருக்கிறது.
காலையில் படுக்கையிலிருந்து எழுந்திருப்பது முதல்
இரவு திரும்பப் படுக்கைக்குப் போகும்வரை
நம் தினசரி வாழ்க்கை காட்சிகளாகத்தான் நகர்கிறது.
சந்தேகமாய் இருந்தால் நேற்று என்ன நடந்தது என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள்.
யார் யார் வந்தார்கள்.
என்ன என்ன செய்தார்கள்,
என்னென்ன பேசினார்கள் என்று ஒவ்வொன்றும்
ஒரு காட்சியாகத்தான் ஞாபகம் வரும்.
அவ்வளவு தூரம் போவானேன்?
இந்த வரிகளை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும்
இந்த நிமிஷமே கூட ஒரு காட்சிதான்.
காலை வேளை வெளியே ஒரு குருவி கூவுகிறது.
நீங்கள் சோபாவில் உட்கார்ந்து ஜன்னலின் மீது
காலை நீட்டிக் கொண்டு இதைப் படிக்கிறீர்கள்.
காப்பி ஆறிப்போகிறதே என்று மனைவி ஞாபகப்படுத்துகிறாள்.
கடியாரம் டிக்டிக் என்கிறது. வயிறு நிறையச் சாப்பிட்டிருப்பதால் ஏப்பம் வருகிறது.
நீங்கள் கையில் பிடித்திருக்கும் இந்தக் காகிதத்தில் ஒரு வித வாசனை _
இப்படிப்பட்ட புற விஷயங்கள் மட்டுமல்ல, மனதுக்குள்ளும் ஓர் எண்ணம்.
"இந்த ஆள் என்னவோ
“கதை எழுதுவது எப்படியென்று சொல்லித் தருகிறானாமே? அது என்னதான் பார்ப்போம்" என்று ஆவலான ஒரு 'மூடு உங்கள் மனதில் இருக்கிறது.
இவ்வளவும் சேரும்போது என்ன உருவாகிறதோ,
அதன் பெயர்தான் காட்சி.என்கிறார் ரா.கி.ரங்கராஜன் தன்னுடைய “எப்படி கதை எழுதுவது” என்னும் நூலில்..
ஆக நீங்கள் ஒரு ஆகச்சிறந்த திரைக்கதையாளராகவோ அல்லது சிறுகதை ஆசிரியராகவோ
அல்லது நாவல் ஆசிரியர் ஆகவோ கவிஞராகவோ ஆக வேண்டும் என்றால் ரா.கி.ரா சொல்வது போல் உங்களைச்
சுற்றியுள்ளவர்களை, ஒலிகளை, வாசங்களை,
இன்னபிறவற்றை எழுத்தாக எழுதிப்பாருங்கள்.
நீங்கள் எழுதியது படிப்பவர்க்கு ஒரு காட்சியை உருவாக்குகிறதா? எனக் கேட்டுப்பாருங்கள்.
இது தான் எழுதுவதன் முதல்படி
ம். சொல்ல மறந்து விட்டேன்.
இந்த வாரம் உங்களுக்கு மூன்று வீட்டுப்பாடங்கள்
1. உங்களுக்குப்
பிடித்தப் படங்களின் கதைச் சுருக்கங்களை எழுதாமல்… ஒன்லைன் அதாவது கதைக் கருவை எழுதிப்பாருங்கள்.
2. உங்களிடம்
உள்ள கதைகளின் ஒன்லைன்களை (கரு) எழுதிப்
பாருங்கள்.
3. அதற்கு
முன் இரண்டு பக்கம் உங்களை சுற்றி உள்ளவற்றை காட்சியாக எழுதிப்பாருங்கள்.
எழுதினால் என்னுடைய prof.donstony@gmail.com முகவரிக்கு
அனுப்புங்கள்.
பின்குறிப்பு – ஷேர் பண்ணுங்கள்
எதாவது கமெண்ட் பண்ணுங்க.