வெள்ளி, 9 மே, 2025

பகுதி – 2 “ஹீரோ” (ஹீரோவிற்கு கதை உருவாக்குவது எப்படி?) (ஒரு நாயகன் உருவாகிறான்)

பகுதி – 2

“ஹீரோ”

(ஹீரோவிற்கு கதை உருவாக்குவது எப்படி?)

ஹீரோக்களை உருவாக்க அடிப்படையாக என்ன வேண்டும்?

ஒரு கதை வேண்டும்..

கதைக்கா நமக்குப் பஞ்சம்?

நம் குடும்பங்களைச் சுத்திப் பார்த்தால் பத்தாயிரம் கதைகள்

தங்கையின் கல்யாணத்திற்காக திருமணமே செய்து கொள்ளாத அண்ணன்…”

குடிகார அப்பனுக்கு முதல் குழந்தையாபிறந்த பெண்பிள்ளை… திருமணம் செய்து கொள்ளலாம் குடும்பாரம் சுமக்கிறாள். அவளுக்கு ஏற்படும் இன்னல்கள்.”

எதைச் சொன்னாலும் கேட்காமல் ஊர் சுற்றும் தம்பியால் குடும்பம் படும் பாடுகள்

தாத்தா,பாட்டி,தம்பி, தங்கை, அக்கா மாமா பேரக்குழந்தைகள் என இரத்தமும் சதையுமாக வாழ்ந்து கிடக்கும் குடும்பத்தில்.. ஒரு பேரக்குழந்தைக்கு திருமணம் நடக்கப்போகிறது. திருமண பத்திரிகையில் பெயர் போடாத காரணத்தால் ஒன்னா மண்ணா இருந்த உறவுகள் வெட்டுக்குத்து எனச் சின்னா பின்னமாக பிரியும் குடும்பம்

வேற்றுசாதியில் திருமணம் செய்து இணைபிரியாமல் வாழும் காதல் ஜோடிகளுக்கு ஒரு மிஸ்டுகாலால் வந்த விபரீதம்

சினிமாவில் இயக்குநராகி பெரிய இடத்தில் கல்யாணம் செய்து வாழ நினைக்கும் ஒருவன். வாய்ப்புக் கிடைக்காமல் பார்ட் டைம்மாக ஜிம்மில் பயிற்சியாளனாக வேலைக்குச் சேருகிறான். அங்கு வரும் அம்பானி மாதிரி ஒருபெரிய பணக்காரப் பெண்ணிற்கு ஓர்க் அவுட் சொல்லித் தரும்போது அந்த பெண்ணையே காதலித்துத் திருமணமாகி செட்டிலான கதை

என நம்மைச் சுற்றி பல்வேறுவிதமான கதைகள் கொட்டிக்கிடக்கின்றன.

ஆனால் இந்தக் கதைகள் எல்லாம் மாணிக்க கதையாகுமா? என்றால்? “ஆகும்எப்படி? அதற்கு ஒரு பார்மெட்(Formet) உள்ளது.

Formetக்குள் கதை பண்ணினால் பாக்ஸ் ஆபீஸ் நிரம்பி வழியுமா? வழியும்.

 2000 ஆண்டுகள் தொன்மையான நம் இலக்கிய வடிவங்களுக்கென ஒரு வடிவம்(Formet) உள்ளது.

சிறுகதை என்றால் இப்படித்தான். அதில் ஒரு தொடக்கம்.. வளர்ச்சி… பிரச்சனை வீழ்ச்சி… முடிவு என ஒரு வடிவம் உள்ளது.

நாவல் என்றால் இப்படி ஆரம்பித்து இப்படி முடிக்க வேண்டும்.

மரபுக்கவிதை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என எல்லா இலக்கிய வடிவத்திற்கும் ஒரு வடிவம் உண்டு. வடிவத்தை மாற்ற முடியாது.

பாடல் என்றால் ஒரு பல்லவி …. பல்லவிக்குப் பிறகு முதல் சரணம்.. இரண்டாம் சரணம்.. இடைஇடை வரும் இடையிசைகள் என ஒரு வடிவம் உண்டு.

அதே போல… குழம்பு என்றால் இப்படிதான்..

ரசம் வைத்துவிட்டு குழம்பு என்றால் ஏற்றுக் கொள்ள முடியாது அல்லவா?

அப்படித்தான் ஹீரோக்களை வடிவமைப்பதிலும் ஒரு வடிவம் உண்டு என்பதைத்தன் தன்னுடைய ஆராய்ச்சியின் முடிவில் அறிகிறார் ஜோசப் கேம்ப்பல்

உலகம் முழுவதும் இருக்கிற இதிகாசங்களையும் புராணங்களையும் காப்பியங்களையும் ஆராய்ந்த பேராசிரியரான ஜோசப் கேம்பல்,

உலகம் முழுக்க எப்படி மக்கள் ஒரே மாதிரியான ஹீரோக்களை உருவாக்குகிறார்கள்?

அவர்கள் உருவாக்குகிற ஹீரோக்களை எப்படி உலக மக்கள் அனைவரும் ஒருசேர விரும்புகிறார்கள்”? என்பதை அறிந்து வியக்கிறார்.

அந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் பிறந்ததுதான் இந்தஹீரோஸ் பயணம் THE HERO’S JOURNEY ( A THOUSEND FACES  OF HERO) என்ற இந்த நூல்.

வர் கூற்றுப்படி

புத்தர், தன் தாயின் கருவில் இருக்கும்போதே ராஜா..ஆனால் அவர் ராஜாவாக ஆகவில்லை.

ஒருவேளை இராஜாவாக ஆகி இருந்தால் புத்தர் வரலாறு நமக்கு சுவாரஸ்யமாக  இருக்காது.

அந்த சுவாரஸ்யம் கூட்டவே ஜோசியக்காரன், இராஜாக்கள், நட்சத்திரம் பிறந்த தேதி.. இந்தத் தேதியில், இந்த நட்சத்திரத்தில் பிறந்தால்

ஒன்று புத்தர் பேரரசன் ஆவார் அல்லது உலகை ஆளும் சன்யாசி ஆவார் என்று ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைக்கவே.. அதனால், அவர் தந்தை எடுக்கும் முடிவுகள், அதனால் புத்தருக்கு ஏற்படும் பாதிப்புகள் என கதை நமக்கு வியப்பைக் கூட்டுகிறது.

இராமன் கருவிலே இருக்கும்போதே அவர் ராஜா

ஆனால் அவர் ராஜாவாக ஆவதில் எவ்வளவு சிக்கல்கள்.?

கைகேயி, கூனி, பரதன், காடு.. வாலி, குகன், மந்தாரை, இராவணன், இந்திரஜித்து, கும்பகர்ணன், என எத்தனை கதாபாத்திரங்கள் தேவைப்படுகிறது அவர் மீண்டும் அரியணை ஏற..

இயேசு கிறிஸ்து பிறப்பதே கடவுளின் அருளால்..

நேராக பிறந்து.. நேராக போதித்து நோராக சொர்க்கம் சென்றிருக்கலாமே..

ஆனால், கருவில் இருக்கும்போதேவிண்ணகத் தலைவன் ஒருவன் பிறக்கிறான்” “அவரே உலகின் ஒளிஎன்று நேராக ஏன் ராஜாவிடம் போய் சொல்ல வேண்டும். அவன் ஏன் ஊரில் உள்ள அத்தனை ஆண்குழந்தைகளையும் கொல்ல வேண்டும்.

இப்படி ஹீரோக்களை உருவாக்கும்போது

எல்லோரும் எப்படி ஒரே மாதிரியான வடிவத்தில் கட்டமைக்கிறார்கள் என்பதை ஆராய்கிறார் ஜோசப் கேம்பல்..

இவர் அடிப்படையில் பார்க்கும்போது சிலப்பதிகாரம், மணிமேகலை என எல்லா புராண இதிகாச ஹீரோஹீரோயின் அனைவரும் ஒரே மாதிரியான டெம்ப்லேட்டிற்குள்ளேயே அடங்குகிறார்கள் என்பதை நம் அறிவுக்கண் கொண்டு ஆராய முடிகிறது.

இதில் என்ன அழகு என்றால்,

பைபிளை எழுதிய நால்வரோ,

இராமாயணம் எழுதிய கம்பரோ,

சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவோ,

மணிமேகலை எழுதிய சீத்தலையோ,

சீவக சிந்தாமணி எழுதிய திருத்தக்கரோ

ஜோசப் கேம்பல் எழுதிய டெம்ப்ளட் வைத்தோ அல்லது

பார்மெட் வைத்துக் கொண்டோ எழுதவில்லை.

மாறாக, உலகில் எந்த தேசத்தில் இருந்தாலும்

நாய்கள் என்பதும்,

சிங்கங்கள் என்பதும்

பாம்புகள் என்பதும் ஒரே மாதிரியான குணத்தோடு இருப்பது போல..

உலகில் எந்த தேசத்தில் இருந்தாலும்

மனிதன் என்ற உயிர்கள் அனைத்தும் ஒரேமாதிரியான நேர்க்கோட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளனர்  என்பதை ஆராய்ச்சின் முடிவில் அறிந்து,

அதன் அடிப்படையிலேயே ஹீரோக்களை உருவாக்குகின்றனர் எனத் தெளிகிறார் ஜோசப் கேம்பல்.

இந்நூலில் முதல் பகுதி, இரண்டாம் பகுதி என இரண்டு பகுதிகள் உள்ளன.

முதல் பகுதியில் The Adventure of the Hero எனவும்,

இரண்டாம் பகுதியில் The Cosmogonic Cycle என இரண்டு தலைப்புகள் உள்ளன.

முதல் பகுதியில் CHAPTER I, CHAPTER II, CHAPTER III, CHAPTER IV என நான்கு பகுதிகள் உள்ளன.

இந்த நான்கு பகுதிகளில் குட்டி குட்டித் தலைப்பாக 17 தலைப்புகளில் ஒரு ஹீரோ எப்படிக் கட்டமைக்கப்படுகிறார் என்பதை மிகத் துல்லியாக வரிசைப்படுத்தி விளக்கியுள்ளார்.

இவை குறித்தெல்லாம் பின்வரும் அத்தியாயங்களில் காண இருக்கிறோம்.

அந்த 17 தலைப்புகளில் கீழ் வடிவமைக்கப்பட்டு எழுதப்பட்ட God Father….

God Father திரைப்படத்தைப் பார்த்து எடுக்கப்பட்ட இயக்குநர் மணிரத்தினத்தின் “நாயகன்”..

நாயகனிலிருந்து எடுக்கப்பட்ட கமலின் “தேவர்மகன்”..

ஆகிய திரைப்படங்களின் திரைக்கதைக்கு அல்லது

ஹீரோ வடிவமைப்பிற்கு ஜோசப் கேம்பலின் இந்த THE HERO’S JOURNEY ( A THOUSEND FACES  OF HERO) என்னும் நூல் எவ்வளவு கைக்கொடுத்துள்ளது என இனிவரும் தொடர்களில் காண இருக்கிறோம்.

அதற்கு முன் திரைப்படத்திற்கான ஒரு கதையை எப்படித் தேர்ந்தெடுப்பது?

 ஒரு கதை நம்மிடம் உள்ளது.

ஊர் கதையே.. உலகைக் காக்க கூடிய அட்வெட்சர் கதையோ

எதுவாக இருந்தாலும் அந்தக் கதைக்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும்

நோக்கம் இல்லாத எந்தக் கதையும் கரை சேராது எனலாம்.

 நோக்கம் – “நோக்கம் என்பது மிக எளிமையானதாக இருக்க வேண்டும்என்கிறார் சிட்பீல்டு.

நோக்கத்தை அடிப்படையாக வைத்து கதையின் ஒன்லைனைத் தேர்வு செய்தல் என்பது மிக முக்கியமானதாகும்.   

ஒன்லைனே ஒரு படத்தின் ஆதார சுருதி எனலாம்.

நோக்கத்தை சரியாக கட்டமைக்கவில்லை என்றால்,

அந்தத் திரைப்படம் எதை நோக்கிப் போகிறது என்றே தெரியாமல் போய்விடும்.

நோக்கத்தைக் கட்டமைக்க ஒன்லைன்கள் மிக மிக மிக முக்கியம்.

எடுத்துக்காட்டாக சில ஒன்லைன்களை இங்கு காணலாம்.

1.   வன்முறையே வேண்டாம் என நினைக்கும் ஒருவன் வாழ்வில் வன்முறை புகுந்தால் என்னவாகும்? (பாட்சா)

2.   திருமணமே வேண்டாம் என நினைக்கும் ஒரு பெண்ணிற்கு இரண்டு நாளில் திருமணம் நடந்தால் என்ன ஆகும். (மௌனராகம்)

3.   தன் அண்ணனின் அரசியல் வாழ்வு பிரகாசிக்க இளைஞர்களைப் பலிகாடாக்கும் தம்பி. (சுப்ரமணியபுரம்)

4.   படித்து வேலை இல்லாமல் முட்டுசுவற்றில் அமர்ந்திருக்கும் இளைஞர்களை தன்னுடைய அரசியல் வாழ்விற்காகப் பலிகொடுக்கும் ஓர் அரசியல்வாதி. (சத்யா).

5.   சேம்பேறியான நான்கு இளைஞர்கள் பணத்திற்காக ஒரு அமைச்சரின் மகனை கடத்தினால் என்னவாகும்? (சூது கவ்வும்)

6.   ஒரு கேங்ஸ்டர் வாழ்வில் ஒரு ஆர்ட் (கலை)  புகுந்தால் என்னவாகும்?”(ஜிகிர்தண்டா -1)

7.   அப்பாவின் கேங்ஸ்டர் தொழில் பிடிக்காமல் ஒதுங்கி வாழும் மகன்… காலச்சூழலால் தானே கேங்ஸ்டர் ஆகும் நிலை வந்தால் என்னவாகும் (காட் பாதர்)

8.   எல்லையில் நாட்டைக் காக்கும் ஒரு இராணுவ அதிகாரி……… நாட்டுக்குள்ளும் நாட்டைக் காக்க வந்தால் என்ன நடக்கும் (துப்பாக்கி)

9.   பணத்தாசை கொண்ட இரண்டு போலீஸ் அதிகாரிகள்…. மிகப்பெரிய பணம் கைமாறப் போவதை அறிந்து உள்ளே இருந்து ஒருத்தரும், வெளியே இருந்து ஒருத்தரும் பணத்தை திருடிச் சென்றால் என்னவாகும்? (மங்காத்தா)

10.  தன் மகளின் எதிர்காலத்திற்காக கொள்ளையடிக்கும் ஒருவன். கொள்ளையடிப்பதால் ஏற்படும் பாவத்தால் அவன் மகளே பாதிக்கப்பட்டால் என்னவாகும் (மகாராஜா)

இப்படி உங்கள் கையில் இருக்கும் கதைக்கு முதலில் ஒரு ஒன்லைன்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

ஒன்லைன்களே உங்கள் கதையை முழுமை அடைச் செய்யும்.

கதை எதை நோக்கி, எப்படி போக வேண்டும் என்பதை முடிவு செய்யும்.

திரைக்கதை எழுதலாம் வாங்க என்னும் நூலில் “முதலில் நீங்கள் பார்த்த திரைப்படங்களின் கதைகளில் உள்ள ஒன்லைன்களைத் தனியாக ஒரு பேப்பரில் எழுதி பாருங்கள் என்பார் கருந்தேள் ராஜேஸ்.

இது முற்றிலும் நூற்றுக்கு நூறு உண்மை.

நீங்கள் வைத்திருக்கும் எப்படிப் பட்ட கதையானாலும் முதலில் அதில் ஒரு ஒன்லைன் சிக்குகிறதா என பார்க்க வேண்டும்.

சிக்கவில்லையா? நம் கதைஞானம் உள்ள நண்பர்கள் எதிரிகளிடம் போய் நம்மிடம் உள்ள கதைகளைக் கூறி “ இந்தக் கதையின் ஒன்லைன் என்ன? என பேசிப்பார்க்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக, நம் எல்லோருக்கும் தெரிந்த “பாட்ஷா” படத்தின் ஒன்லைனைக் கேட்டுப் பாருங்களேன்.

அவர்கள் கூறுவது “ பாம்பேயில் இருந்து ஓடி வந்த ஒரு கேங்ஸ்டர் ஆட்டோ ஓட்டி பிழைக்கிறார். அவருக்குக் காதல் வருகிறது. தம்பி போலீசுகாரன். ரெண்டு தங்கச்சிகள் கல்யாண வயசில் ……” என படத்தின் கதையைக் கூறுவார்கள்.

ஆனால் பாட்ஷா படத்தின் ஒன்லைன் என்பது

“ வன்முறையே வேண்டாம் என நினைக்கும் ஒருவனுக்கு பல வழிகளில் வன்முறையைக் கையில் எடுக்க அவனைச் சுற்றி சுற்றி வருகிறது. அவன் வன்முறையைக் கையில் எடுத்தானா? இல்லையா? எடுத்தால் என்ன? ஆனான்? என்பதே ஒன்லைன்.

ஒரு படத்திற்கான ஒன்லைன் பிடிப்பது என்பது தான் சிரமம்.

ஒன்லைன் பிடித்துவிட்டால் அப்புறம் எல்லாம் எளிமைதான்.

அப்புறம் அந்த ஒன் லைனை டெவலப் பண்ணுவது எளிதுதான்.

எடுத்துக்காட்டாக இந்த பாட்ஷா ஒன்லைனை டெவலப் பண்ணி பார்ப்போம்.

1.    வன்முறையே வேண்டாம் என நினைக்கும் ஒருவன்

யார் அந்த ஒருவன் கல்லூரி பேராசிரியரா? அல்லது பள்ளி ஆசிரியரா? பஸ் டிரைவரா? வாட்ச்மேனா? திரை இயக்குநரா? என ஹீரோவை யோசித்துப் பார்த்தால் எதிலும் ஈர்ப்பு இல்லை.

2.    வன்முறையே வேண்டாம் என நினைக்கும் ஒரு கேங்ஸ்டர்

இந்த தலைப்பே எப்புடி இருக்கிறது பாருங்கள். என்னாது கேங்ஸ்டர் வன்முறை வேண்டாமுனு நினைக்கிறானா? ஏன் என்ற கேள்வி ஆடியன்ஸ்க்கு நாம் சொல்லாமலேயே தொத்திக் கொள்ளும் அல்லவா?

3.   சரி அவன் ஏன் வேணாமுனு சொல்றான்?

ஏன்னா அவுங்க அப்பா வேணாமுனு சொல்லிட்டார் என பதில் வருகிறது.

4.   ஏன் அவுங்க அப்பா வேணாமுனு சொல்றான்?

ஏன்னா முதல் மனைவிக்குப் பிறந்த பாட்ஷா மட்டுமில்லாமல்… சென்னையில் அவருக்கு இரண்டாம் மனைவியும் மனைவிக்குப் பிறந்த இரண்டு பெண்பிள்ளைகளும் ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றனர். தான் செத்துப் போனதுக்குப் பிறகு அவர்களை நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த வன்முறை எதுவும் இல்லாமல் அமைதியாக வாழ வேண்டும் என்ற தன் கடைசி ஆசையை கூறி ரத்தம் வடிய செத்துப் போகிறார்.

5.   சரி சென்னைக்கு வந்து என்னா பண்றார்? ஆட்டோ ஓட்டுகிறார்.

6.   வன்முறையை என்ன என்ன வழிகளில் அவருக்கு வருகிறது?

       கல்லூரி பிரின்ஸ்பால் இவர் தங்கையை படுக்க கூப்புடுகிறார்.

        மற்றொரு தங்கையை கல்யாணம் செய்ய வரதட்சனைக் கேட்கிறார்கள்

தன் ஆட்டோவை ஸீட்டுவேறு கவரு வேறாக பிரித்து எடுக்கிறார்கள்.

7.       சரி எப்பதான் வன்முறையைக் கையில் எடுத்தார்?

8.   யார் உயிர்க்காக வன்முறையைக் கையில் எடுக்க வேண்டாம் என நினைத்தாரோ அவர்கள் உயிருக்கு ஆபத்து வரும் போது கையில் அடிபம்ப்பை கையில் எடுக்கிறார்

என ஒன்லைன்களை டெவலப் செய்து கொண்டே போகலாம். ஈர்ப்பு இருக்கும். ஒரு இன்ச்சாவது கதை நகரும் சுவாரஷ்யம் கூடும்

ஒன்லைன்கள் என்பது நமக்கு ஒன்றும் புதிதல்ல..

இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட காப்பியங்களின் ஒன்லைன்கள்

அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்

உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும் சிலப்பதிகாரம்

நாட்டில் தோன்றிய பசிப்பிணி என்னும் நோயை தனக்குக் கிடைத்த மேஜிக் பாக்ஸ்சால் தீர்த்து வைக்கும் கதாநாயகி மணிமேகலை]

பெற்றோரிடம் இருந்து சூழ்ச்சியால் இழந்த நாட்டை மீண்டும் கைப்பற்றி அரியணை ஏறும் ஹீரோ சீவகசிந்தாமணி

தாயை ஏமாற்றி விட்டு தன்னை அனாதை ஆக்கிச் சென்ற தந்தையைக் கண்டுபிடித்து மீண்டும் தாயுடன் சேர்த்து வைக்கும் மகன் - வளையாபதி

தன்னைக் கொல்ல நினைத்த கணவனை தன்னுடைய மதி நுட்பத்தால் கொன்றுவிட்டு உலக இன்பத்தைத் துறக்கும் ஹீரோயின் குண்டகேசி

இப்படி ஒன்லைன்களை உருவாக்கி விட்டு அதற்கேற்ப கதையை வடிவமைத்தால் திரைப்படமோ, நாவலோ, சிறுகதையோ, கவிதையோ ஆகச்சிறப்பாக அமையும் என்பது எடுத்துக்காட்டுகளின் வழி அறியலாம்.

ஒன்லைன்களை மட்டும் உருவாக்கி விட்டால் சரியாகி விடுமா?

ஹீரோக்களை எவ்வாறு உருவாக்குவது?

அடுத்த வாரம் தொடரும்..

( பின்குறிப்பு – அப்படியே டைப் அடித்து … அப்படியே அப்லோடு செய்வதால் டைப்பிங் பிழைகள், ஒற்றுப்பிழைகள், ஒருமை பன்மை பிழைகள், வாக்கியப்பிழைகள், தொடர் பிழைகள், உயர்திணை அஃறிணை பிழைகள் என அனைத்தும் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. குறிப்பாக ஆங்கில சமஸ்கிருத சொற்கள். டைப் அடிக்கும்போதே அவற்றை நானும் அறிவேன். இருப்பினும் ஒரு ப்ளோ கிடைக்காது என்பதால் அப்படியே பதிவிடுகிறேன். நூலாக்கம் செய்யும் ஒரு எண்ணம் உள்ளது. அப்போது அத்துணைப் பிழைகளும் அகற்றப்படும் என உறுதியளிக்கிறேன். நன்றி.)

யோசனை- 1

v  நண்பர்களிடம் கொடுத்து கரெக்சன் பார்த்து அப்லோடு செய்யலாமே!

v  அவர்கள் கட்டுரையையே வேறு கட்டுரையாக மாற்றிவிடுகிறார்கள். என்ன செய்ய..

v  அடுத்த வாரம் சந்திப்போம்.

 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக