ஞாயிறு, 13 ஜூலை, 2025

பகுதி - 6 - “ஹீரோ” (ஹீரோவிற்குக் கதை எழுதுவது எப்படி?) கேரக்டர் வடிமைப்பு

 

    

பேரா. முனைவர் த. டான் ஸ்டோனி

தமிழ்த்துறை,

இலயோலா கல்லூரி,

சென்னை

9944911404 –

prof.donstony@gmail.com

 

இந்தக் கட்டுரையில் திரைக்கதைக்கு மிகவும் அவசியமான

   கேரக்டர் என்றால் என்ன?

   கேரக்டரை எப்படி அமைக்கக் கூடாது?

            கேரக்டரை எப்படி அமைக்க வேண்டும்?

            கேரக்டருக்கு என்ன அவசியம்?

    கேரக்டர் அமைப்பதில் உள்ள மூன்று கூறுகள்ஆகிய தலைப்புகளைப் பார்க்கப் போகிறோம்


கேரக்டர் இல்லாமல் திரைக்கதை இல்லை. திரைக்கதையை சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் கொண்டு செல்வது அதில் வரும் கேரக்டர்கள்தான். ஆகையால் திரைக்கதை எழுதும் கலையில் நீங்கள் முக்கியமாகப் பயில வேண்டிய அம்சம் கேரக்டர் அமைப்புதான். அதாவது கேரக்டர் ஸ்கெட்ச்.

1.   1. கேரக்டர் என்றால் என்ன?

ஒரு பாத்திரத்தின் குணத்தைச் சொல்வது கேரக்டர் ஆகும்

2.   சரி, குணம் என்றால் என்ன?

ஒரு மனிதன் தனக்கு அல்லது தன்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்களுக்கு எப்படி ரியாக்ட் செய்வான் என்பதே அவன் குணம் ஆகும்.


 எப்படி ரியாக்ட் செய்வான்?

அது அவன் வளர்ந்த சூழலைப் பொருத்து அமையும்

4.   வளரும் சூழல் என்றால் என்ன?

அவன் எப்படி வளர்கிறான். அம்மா அப்பாவுடனா? அல்லது ஹாஸ்டலிலா?

ஏன் ஹாஸ்டல் போகிறான்?

அம்மா அப்பா இல்லையா?

ஏன் இல்லை?

அம்மா – அப்பாவிற்குள் விவாகரத்தா?

அல்லது அம்மா – அப்பா யாராவது இறந்து விட்டார்களா?

பாட்டியிடம் வளர்ந்தானா?

தாத்தாவுடன் வளர்ந்தானா?

தாத்தாவின் பழக்க வழக்கங்கள் என்ன என்ன?

பாட்டி செல்லமா? பாட்டி பார்க்கும் நேரம் எல்லாம் சுருக்குப் பையை அவிழ்த்து காசு கொடுத்துக் கொண்டே இருப்பாளா?

அந்தக் காசை வாங்கி என்ன செய்கிறான்?

நண்பர்களுக்குக் கொடுப்பானா? கஞ்சா அடிப்பானா? கோயில் உண்டியலில் போடுவானா?

இல்லை பணக்கார வீட்டுப்பிள்ளையா?

பணக்கார வீட்டுப் பிள்ளை என்றால் அவனுக்கும் பெற்றோருக்கும்மான உறவுமுறை எப்படி இருந்தது?

பள்ளியில் எப்படி? ஆசிரியருக்குப் பயப்படும் பிள்ளையா? ஆசிரியருக்கு தோஸ்தா? ஆசிரியரைக் கை நீட்டி அடிப்பவனா?

அவனுடைய ஆசிரியர் எப்படிப் பட்டவர்? சாதி வெறி பிடித்தவரா?

அல்லது தன்னிடம் படிக்கும் ஒவ்வொரு குழந்தையும் தன் சொந்தக் குழந்தையாக நினைத்து அவர்கள் வாழ்வு உயர்வதற்கு உழைப்பவாரா?

பள்ளியில் இவன் எந்தமாதிரி விளையாட்டுகளில் விளையாடுவான்? கபடியா? கிரிக்கெட்டா? புட்பாலா? அவற்றில் ஏதேனும் பிரச்சனை வந்தால் ஒதுங்கிப் போகிறவனா? ஓங்கி பளார்னு அடிப்பவனா?

யாரையும் காதலிக்கிறானா? யாரும் இவனைக் காதலிக்கிறார்கள்?

இப்படி பல்வேறு வினாக்களை எழுதி அதற்கு விடையாக உங்கள் வாழ்விலோ, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் வாழ்விலோ பார்த்த நிகழ்வுகளை விடையாக பொருத்தி ஒரு டிராப்ட் எழுதிக் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட விசயங்கள் தான் அவன் ஒரு பிரச்சனைக்கு எப்படி ரியாக்ட் செய்கிறான் என்பது அமையும்.

 

எடுத்துக்காட்டாக, பஸ்ஸில் செல்கிறீர்கள். அங்கே ஒருவன் ஒரு பெண்ணை பயங்கரமாக சில்மிஷம் செய்கிறான். அதைக் கண்டு அந்த பஸ்ஸில் உள்ள அனைத்து மனிதர்களும் எப்படி ரியாக்ட் செய்கிறார்கள் என்பதே அந்த பஸ்ஸில் உள்ள மனிதர்களின் குணங்கள்.

இதை ஒரு கற்பனையாக வைத்துக் கொண்டு பல்வேறு வயதுள்ளவர்கள்இருக்கும் பஸ்ஸாக நினைத்துக் கொண்டு ஒவ்வொரு வயதினரும் இதற்கு என்ன மாதிரி ரியாக்ட் செய்கிறார்கள்? என்ன மாதிரியான வசனம் பேசுகிறார்கள் என்ன எழுதி பாருங்கள்.

 இதன் மூலம் மனிதர்களின் குணத்தை எப்படி முகபாவனைகள் மூலமாகவோ வசனம் மூலமாகவோ அல்லது வெளிப்படுத்த முடியும் என்பதை அறிவீர்கள்.

முகபாவனைகள் மூலமாக கேரக்டரை வெளிப்படுத்துதல்

சார்பெட்டா பரம்பரைதிரைப்படத்தில் ஒரு காட்சி வரும். வாத்தியாரின் மகன் கலையரசன் தன்னைத்தான் அடுத்த குத்துச் சண்டை வீரன் ஆக்க போகிறார் என்பதை தன் மனைவியிடம் சொல்லி விட்டு மிக சந்தோசமாக வெளியே ஓடுவான்.

எல்லோரும் சந்தோசமாக இருப்பார்கள்.

ஆனால், கலையரசன் மனைவிக்கு மட்டும் ஒரு சோகமான க்ளோசப் வைத்திருப்பார்கள்.

இப்படி முகபாவணைகள் மூலமாக வெளிப்படுத்தும் காட்சியை  (க்ளோசப்பை) சஜசன் ஷாட் (Suggestion shot)”என்பார்கள்.

ஏன் அந்த இடத்தில் கலையரசன் மனைவிக்கு சஜசன் ஷாட் வைத்தீர்கள்என இயக்குநர் பா. ரஞ்சித்திடம்  ஒரு பேட்டியில் கேட்கிறார்கள்.

அதற்கு பா.ரஞ்சித்

தந்தைக்குப் பிறகு குத்துச்சண்டை வீரனாக தலைமையேற்பதில் எல்லோருக்கும் மகிழ்ச்சி.

மனைவிக்கு மகிழ்ச்சி தான் ஆனாலும் சோகம்.

ஏன் என்றால், ஒரு வீரன் குத்துச் சண்டைக்குப் போகிறான் என்றால் குறைந்தது ஆறுமாதம் மனைவியிடம் இல்லற இன்பம் (செக்ஸ்) வைத்துக் கொள்ள மாட்டான்.

இப்போது தான் ஒரு சண்டைக்குப் போயிட்டு வந்துள்ளான்.  மீண்டும், சண்டை என்றால் அடுத்த ஆறு மாதம்? என்ற கேள்வியை மனைவி யோசிப்பதை வசனம் இல்லாமல், ஒரு சஜசன் ஷாட்டில் சொல்ல நினைத்தேன். அது தான் அந்த சஜசன் ஷாட்என்கிறார் இயக்குநர் பா. ரஞ்சித்.

இப்படி ஒரு கேரக்டர் என்பது ஒரு சம்பவத்திற்கு எப்படி ரியாக்ட் செய்கிறது/செய்யும் என்பதை முகபாவணைகள் மூலமாக வெளிப்படுத்துதலுக்கு நல்ல எடுத்துக்காட்டு. திரைக்கதை எழுதும் போது இது மிக முக்கியம்.

வசனங்கள் மூலமாக கேரக்டரை வெளிப்படுத்துதல்

அதுபோல அக்னி நட்சத்திரம்திரைப்படத்தில் பிரபு அமலாவுடன் இரவு நேரத்தில் வருவார்கள். கார்த்திக் தன் நண்பர்களுடன் சேர்ந்து பிரபுவை கலாய்க்கும் போது, அமலாவைப் பார்த்து என்னா தள்ளிட்டு வந்துட்டீயா?” என கேட்பார்.

உடனே அருகில் நிற்கும் அமலாவும் பிரபுவிடம் என்ன தள்ளிட்டு வந்துட்டீயா?” என சிரித்துக் கொண்டே கேட்பாள்.

இந்தக் காட்சியும், இந்த டயலாக்கும். அப்போது ரொம்ப பிரபலம்.

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் இதுகுறித்து ஒரு பேட்டியில் இயக்குநர் மணிரத்தினத்திடம் பேட்டியாளர்

எப்படி அமலா அப்படி கேட்பது போல் உங்களால் ஒரு வசனம் வைக்க முடிந்ததுஎன கேட்கும் போது,

இயக்குநர் மணிரத்தினம் சொன்ன பதில் ஒரு மார்டன் கேர்ள், அந்த சூழ்நிலையில் எப்படி ரியாக்ட் செய்வாள்என்பதை யோசித்தே அப்படி ஒரு வசனம் வைத்தேன்என்றார்.

ஆக, எந்தச் சூழ்நிலைக்கு எந்தகேரக்டர் எப்படி ரியாக்ட் செய்யும் என்பதை வைத்தே ஒரு கேரக்டரை உருவாக்க வேண்டும் என்பதை இதன் வழி அறிய முடிகிறது.

5.   கேரக்டரை எப்படி அமைக்கக் கூடாது?

ஒரு கதையில் ஒரே மாதிரியான கேரக்டர்களை படைத்தால் அது பார்ப்பவருக்குப் போரடிக்கும்.

ரொம்ப நல்லவனான பாகுபலி. ரொம்ப நல்லவனான நாசர், ரொம்ப நல்லவளான ராஜமாதா. ரொம்ப நல்லவனான ராஜமாதாவின் மகன். ரொம்ப நல்லவனான கட்டப்பா என கேரக்டர்களையும் ஒரே மாதிரி நல்லவர்களாகவோ, கெட்டவர்களாகவோ நீங்கள் படைத்தால், படம் பார்க்கும் ஆடியன்ஸ்க்கு ஸ்ஸ்ஸ்ஸ் அப்ப்ப்ப்ப்பா சரி இப்ப என்னா அதுக்கு எனதியேட்டரில் கேட்க தொடங்குவார்கள்.

அதனால், கேரக்டர் படைக்கும் போது ஒரே மாதிரியான குணங்களைக் கொண்ட மனிதர்களைப் படைக்க கூடாது.

 

6.   கேரக்டர் எப்படி அமைக்க வேண்டும்?

ஒரு திரைப்படத்தில் கேரக்டர்கள் எழுதும்போது பல்வேறு குணங்களைக் கொண்ட கேரக்டர்களை நீங்கள் அமைக்க வேண்டும்.

பல்வேறு கேரக்டர்களுக்கு நாங்கள் எங்கே போவதுஎன்று நீங்கள் என்னைக் கேட்டால், நான் சொல்லும் ஒரே பதில் தொல்காப்பியரிடம் போங்கள்என்பேன்.

தொல்காப்பியத்தில் உரியியல்என்றொரு இயல் உண்டு. இவ்வியலில் உயிர்கள் எத்தனை வகை?

ஓரறிவு உயிர் எது? என்பது தொடங்கி

உயிர் உள்ளவைகளுக்கும், உயிர் அற்றவைகளுக்கும் உள்ள குணங்கள் என்னென்ன? என தனித்தனியாக பிரித்து வைத்துள்ளார்.

கிட்டத்தட்ட மனிதர்களுக்கு 32 வகையான குணங்கள் உண்டு என வகைப்படுத்தி இருப்பார்.

உரியியல் என்றால் இதற்கு உரியது இது என்பது பொருள்.

எதற்கு உரியது இது என்றால்?

உயிர்களுக்கு உரியது இது?

உயிர் அற்றவைகளுக்குரியது இது என்கிறார்.

இது என்பது இங்கு குணத்தை அல்லது பண்பைக் குறிப்பது.

"அறிவு அருள் ஆசை அச்சம் மானம்

நிறை பொறை ஓர்ப்புக் கடைப்பிடி மையல்

நினைவு வெறுப்பு உவப்பு இரக்கம் நாண் வெகுளி

துணிவு அழுக்காறு அன்பு எளிமை எய்த்தல்

துன்பம் இன்பம் இளமை மூப்பு இகல்

வென்றி பொச்சாப்பு ஊக்கம் மறம் மதம்

மறவி இளைய உடல்கொ ளுயிர்க்குணம்." (நூற்பா.439)

  

32 வகையான குணங்களைக் கொண்ட மனிதர்கள்

1. அறிவு உள்ள மனிதன்         2. அருள் உள்ள மனிதன்

3. ஆசை உள்ள மனிதன்         4.அச்சம் உள்ள மனிதன்

5. மானம் உள்ள மனிதன்         6. நிறை உள்ள மனிதன் (மன அடக்கம்).

7. பொறை உள்ள மனிதன்        8. ஓர்ப்பு (ஆராய்ந்து தெளியும் மனிதன்). 

9. கடைப்பிடி உள்ள மனிதன்     10. மையல் உள்ள மனிதன்

11.நினைவு உள்ள மனிதன்        12. வெறுப்பு உள்ள மனிதன்

13. உவப்பு உள்ள மனிதன்         14. இரக்கம் உள்ள மனிதன்

15. நாணம் உள்ள மனிதன்         16. வெகுளி கோபம் உள்ள மனிதன்

17. துணிவு உள்ள மனிதன்         18. அழுக்காறு உள்ள மனிதன்

19. அன்பு உள்ள மனிதன்           20. எளிமை உள்ள மனிதன் 

21. எய்த்தல் (தளர்ச்சியான மனிதன்), 22. துன்பம் உள்ள மனிதன்

23. இன்பம் உள்ள மனிதன்           24. இளமை உள்ள மனிதன்

25. மூப்பு உள்ள மனிதன்             26. இகல் உள்ள மனிதன்

27. வென்றி உள்ள மனிதன்        28. பொச்சாப்பு (மறத்தல் உள்ள மனிதன்). 29. ஊக்கம் உள்ள மனிதன்         30. மறம் (வீரம் உள்ள மனிதன்)

31. மதம் (களிப்பு உள்ள மனிதன்), 32. மறவி (மறந்து செய்யும் குற்றம்  உள்ள மனிதன்) - ஆகிய முப்பத்திரண்டும்

இவை போல பிறவும் உடம்போடு கூடிய உயிர்களினுடைய குணப் பண்புகளாகும் என்கிறார் தொல்காப்பியர். இதனையே வழிமொழிகிறார் நன்னூலார்.

இந்த 32 குணங்களை எடுத்து எழுதி வைத்துக் கொண்டு, ஒரு திரைக்கதை அமைத்தாலே பல்வேறு குணமுள்ள கேரக்டர்கள் உங்களுக்குக் கிடைக்கும்.

எடுத்துக்காட்டாக, ஒரு போலீஸ் ஸ்டேசனின் உள்ள காவலர்கள் எல்லோரையும் ஒரே குணம் கொண்டவர்களாக படைக்காமல், தொல்காப்பியர் கூறும் இந்த 32 வகையில் 15 வகையை எடுத்து வைத்தாலே போதும் காவல்நிலையம் களைக்கட்டும்.

 

7.   கேரக்டருக்கு என்ன அவசியம்?

'கதையை நாம் பாட்டுக்கு எழுதிக் கொண்டு போக வேண்டியதுதானே? கேரக்டர் எதற்கு?' என்று நீங்கள் கேட்கலாம்.

சென்ற மாதம் கிளம்பிய விமானம் கீழே விழுந்து 242 பேர் இறந்தார்கள் செய்தித்தாளில் படிக்கிறோம். இது ஒரு செய்தி என்ற அளவில்தான் அதில் நமக்கு அக்கறை ஏற்படுகிறதே தவிர. நம் மனசை அப்படி ஒன்றும் அது பெரிதாகத் தாக்குவது இல்லை. அதே சமயம் அந்த 242 பேரில் ஒருவர் எதிர் வீட்டில் இருந்த பெண் என்று வைத்துக் கொள்ளுங்கள். பதைபதைத்துத் துடித்துப் போகிறோம்.  ஏனென்றால் 242 நபர்களைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது.  

242 வது நபரான எதிர்வீட்டுப் பெண் நமக்கு மிக நன்றாகத் தெரியும். எனவே அவருடைய வாழ்க்கையில் நிகழும் சோகம் நம்மைப் பாதிக்கிறது.

இந்தக் கேரக்டர் இப்படிப் பட்டவர்

திரைக்கதையிலும் அப்படித்தான். நீங்கள் எழுதும் திரைக்கதையில் ஆடியன்ஸ்க்கு ஈடுபாடு ஏற்பட வேண்டுமானால், அதில் வரும் கேரக்டர் இன்னின்ன மாதிரியானவர் என்று ஆடியன்ஸ்க்குத்  உங்கள் படைப்பின் மூலம் தெரிந்திருக்க வேண்டும்.

அது வசனம் வழியாக நீங்கள் தெரியப்படுத்தலாம்.

காட்சி வழியே தெரியப்படுத்தலாம்.

பாடல் வழி தெரியப்படுத்தலாம். அது உங்கள் விருப்பம்.

எனக்குத் தெரிந்து, “மௌனகுருதிரைப்படத்தில் வரும் ஹீரோ அறிமுகப்பாடல் அத்தனை அழகு. படம் நெடுக வரும் ஹீரோவின் குணாதிசயங்கள் என்னென்ன என்பதை மிக அழகாக படைத்திருப்பார் இந்த இயக்குநர்.

குறிப்பாக, ரோட்டில் இருவர் போதையில் சண்டை போட்டு கட்டி உருண்டு கொண்டு இருப்பார்கள். மண்ணெணனெய் வாங்கி வரும் ஹீரோ அவர்கள் சண்டைக்கு இடையூறு செய்யாமல் ஒதுங்கி போவார்.

அடுத்து, ஒரு வீட்டிற்குள் வந்த பாம்பை பிடிக்கும் ஹீரோ அதை மலை உச்சியில் கொண்டு போய் விடுவார்.

இப்படி அவரவர் பாதையில் அவரவர் செல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஹீரோ என்பதை அறிமுக காட்சியிலேயே இவர் இப்படிப் பட்டவர்என்பதை மிகச் சிறப்பாக பாடல் வழியே சொல்லியிருப்பார்.

மங்காத்தாதிரைப்படத்திலும்,

பாரில் உள்ள அஜித்தை ஒரு பெண் கட்டி அணைப்பாள்.

அடுத்த நாள் அஜித் பெட்ரூமில் அவள் அஜித்தின் சட்டையைப் போட்டு இருப்பாள்.

அப்போது, அஜித்க்கு போன்கால் வரும்.

போன் டிஸ்பிளேயில் த்ரிஷா முகம் வரும்.

இருவரும் எழுந்து ஓடுவார்கள்.

அஜித் என்னும் கேரக்டர் மங்காத்தாவில் இப்படிப்பட்டவர் என்பதை ஆடியன்ஸ்க்கு மிக அருமையாக விளக்கியிருப்பார் இயக்குநர் வெங்கட் பிரபு.

அதனால் தான் அஜித் என்னும் கேரக்டர் த்ரிஷாவின் அப்பாவைக் காரில் இருந்து தள்ளிவிட்டுப் போகும்போது ஆடியன்ஸ்க்கு ஆமாம் அவர் அப்படிப்பட்டவர் தான் என்ற எண்ணம் ஆட்டமெடிக்காக வரும்.

புராணங்களையும் இதிகாசங்களையும் பாருங்கள்.

கொள்ளை கொள்ளையாக எவ்வளவு கேரக்டர்கள்! ராமர், கிருஷ்ணர், அர்ஜுனன் போன்ற கதாநாயகர்களாக விளங்கும் பாத்திரங்கள் மட்டுமல்ல. தனித்தன்மை வாய்ந்த வேறு எவ்வளவு கேரக்டர்கள் நிறைந்திருக்கிறார்கள்!  

துரோகம் செய்ய மாட்டேன்

தேரோட்டியின் மகன் என்று எல்லோரும் கேவலமாகப் பேசிய தன்னை, சரிநிகர் தோழனாக மதித்து ராஜ்யம் கொடுத்து அரசனாக ஆக்கிய துரியோதனனிடம் கர்ணனுக்கு விசுவாசம். அவனுக்குத் துரோகம் செய்ய மாட்டேன் என்று கூறி யுத்த களத்தில் நின்று போராடி உயிரையே கொடுக்கிறான். இவன் ஒரு கேரக்டர்;  

தர்மம்தான் பெரிது

அதேபோல, என்னதான் உடன் பிறந்தவனானாலும் தர்மம்தான் பெரிது என்று கருதி இராவணனை விட்டுவிட்டு ராமரிடம் வந்து சேருகிறான் விபீஷணன். இவன் ஒரு கேரக்டர்.

அண்ணன்தான் பெரியவன்

அதேபோல அதர்மம் செய்கிறவனானாலும் அண்ணன்தான் பெரியவன் என்று அவனுடனேயே இருக்கிறான் கும்பகர்ணன்.

கணவனே கண் கண்ட தெய்வம்

தொழுநோயாளியான கணவனைக் கூடையில் சுமந்து செல்கிறாள் நளாயினி.

பாசமான அம்மா

ஊரெல்லாம் வம்பு வளர்க்கும் பிள்ளையை அடிக்க முடியாமல் பாசத்தில் தவிக்கிறாள் யசோதை.

இப்படி ஏராளமான கேரக்டர்கள் இருக்கிறார்கள்.

புராணங்களில் இப்படிப்பட்ட கேரக்டர்கள் இந்த மாதிரி குணம் உள்ளவர்கள் என படைத்திருப்பதால் தான் புராணக் கதைகள் நம் மனத்தில் ஆழமாகப் பதிந்திருக்கின்றன.

 

8.   கேரக்டர் அமைப்பதில் மூன்று பரிமாணங்கள்?

) கேரக்டர் உடல் இருக்கும் நிலைமை என்ன?

) சமூகத்தில் கேரக்டருக்குள்ள இடம் எது?

) கேரக்டர் மனம் எப்படிபட்டது?

இந்த மூன்று விசயங்களை அடிப்படையாக வைத்து கேரக்டர் உருவாக்க வேண்டும் என்கிறார் ரா.கி. ரங்கராஜன்.

) கேரக்டர் உடல் இருக்கும் நிலைமை என்ன?

நாம் முன்பே பார்த்தது போல, நீங்கள் படைக்கும் கேரக்டர்கள் யார்? அவருக்கு என்ன வயது? அந்த வயதில் அவருக்கான உடல்நிலை என்ன? பலசாலியா? பலவீனமானவரா? கண் தெரியாதவரா? ஒரே மூச்சில் ஓடி களைப்பவரா? அல்லது ஓடவே தெரியாதவரா? வர்மகலைத் தெரியுமா? கராத்தே தெரியுமா? ஒரே நேரத்தில் எத்தனை பேரை அடிக்கக் கூடியவர்? ஹீரோயினை அலேக்காக தூக்கி நடக்கக் கூடியவரா? என அந்த கேரக்டர் குறித்து பல்வேறு செய்திகளை நீங்கள் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். அதற்குத் தகுந்தது போல அந்த கேரக்டரை உடலை வைத்து அதன் பாடிலாங்வேஜ் பிடித்து நடிக்க வைத்தால் சிறப்பாக இருக்கும்.

இராமாயணத்தில் இராவணனின் கேரக்டரைப் பற்றிச் சொல்ல ஒரு அழகான சம்பவம் உள்ளது. ஒரே ஒரு பாட்டிலே கம்பர் பிய்த்து மேய்ந்து இருப்பார்.

இராவணனின் மகன் இந்திரஜித் போருக்குப் போகும் முன் தந்தையிடம் சொல்லுவான் அப்பா நீங்கள் சீதையைத் தூக்கி வந்தது தவறு. அவளை இராமனிடமே போய் ஒப்படையுங்கள். இல்லை என்றால் நாம் அனைவரும் இறந்துவிடுவோம்என்பான்.

அதற்கு இராவணன் என்ற கேரக்டர் சொல்லும் பதில், “டேய் நான் போர் தொடங்கியது. எதோ உன் முன்னோர்கள் வந்து போர் செய்வார்கள் என்றோ, இல்லை நீ வந்து போர் செய்து காப்பாற்றுவாய் என்றோ. இல்லை என்னை சுற்றி உள்ளவர்கள் எல்லாம் வந்து போர் செய்து என்னைக் காப்பார்கள் என்றோ நான் இந்தப் போரைத் தொடங்கவில்லை. இந்தப் போரைத் தொடங்கியது நான் என்னை நம்பியே தொடங்கினேன். இந்தப் போரை எப்படிக் கையாளுவது என எனக்குத் தெரியும். அதனால் நீ கிளம்புஎன்பார் இராவணன்.

இது ஒரு கேரக்டர் ஸ்கெட்ச்க்கு அருமையான உதாரணம். (இந்தப் பாடலை வைத்துதான் கண்ணதாசன் யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்கஎன்ற பாடலை எழுதினார்.)

ஒரு கேரக்டர் எழுதும்போது அவன் உடல் அளவில் எப்படிப் பட்டவன் என்பது குறித்துப் படைப்பாளியான உங்களுக்கு ஒரு தெளிவு இருத்தல் அவசியம்.

) சமூகத்தில் கேரக்டருக்குள்ள இடம் எது?

அடுத்து, சமூகத்தில் எந்த இடம் என்பதைப் பொறுத்து ஒரு கேரக்டர் அமைகிறது. நீங்கள் குடிசைப் பகுதியில் பிறந்து புழுதியிலும் சேற்றிலும் கோலி விளையாடிய பையனென்று வைத்துக் கொள்ளுங்கள். இன்னொரு சிறுவன் பங்களாவில் பிறந்து ஜம்மென்று புல்வெளியில் டென்னிஸ் விளையாடுகிறவன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கும், பங்களா சிறுவனுக்கும் கண்ணோட்டத்தில் வித்தியாசம் இருக்கத்தானே இருக்கும்?

ஒரு கேரக்டரின் அம்மா அப்பா யார், அவர்கள் பணக்காரர்களா, அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள், என்ன புத்தகம் படிக்கிறார்கள். என்ன மாதிரியான சங்கீதம் அவர்களுக்குப் பிடிக்கும்  இவையெல்லாம் சேர்ந்துதான் அந்த கேரக்டர் உருவாகிறது.

) கேரக்டர் மனம் எப்படிபட்டது?

மேற்சொன்ன இரண்டு அம்சங்களுடன்

ஆசைகள்,

லட்சியங்கள்.

விருப்பு வெறுப்புகள்,

கஷ்டங்கள்,

கண்ணோட்டங்கள்,

சோதனைகள்,

உயர்வு தாழ்வு மனப்பான்மைகள்

எல்லாம் சேர்ந்து மனம் என்கிற மூன்றாவது பரிமாணத்தை ஒரு கேரக்டருக்குத் தருகின்றன.

எனவே திரைக்கதை எழுதுவதற்கு முன்பு படத்தில் வரும் முக்கியமான கேரக்டர்கள் யார் யார்? துணைமை கதாபாத்திரங்கள் யார் யார்? அவர்களின் குணம் என்ன? அந்த குணத்தின் அடிப்படையில் தன்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்களுக்கு அந்தக் கதாபாத்திரங்கள் எப்படி ரியாக்ட் செய்யும் என்பனவற்றைத் தனித்தனியாக எழுதி வையுங்கள்.

எழுதி வைக்காமால் திரைக்கதை எழுதினீர்கள் என்றால், எல்லா கதாபாத்திரங்களும் ஒரே மாதிரி இருக்கும் படம் பார்க்கும் ஆடியன்ஸ்க்கும் அக்கதாபாத்திரங்கள் சுவாரஸ்யம் குறையும். சுவாரஸ்யம் குறைந்தால் படம் போரடிக்கும்.

எனவே, சுவாரஸ்யமான திரைக்கதையை எழுதி கோடி கோடியாக கல்லா கட்டுங்கள்.

பை..

பேரா. முனைவர் த. டான் ஸ்டோனி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக